வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க
இந்த ஓவியம் என்னால் தீட்டப்பட்ட ஒன்று, இந்த ஓவியத்தை நான் வரைந்ததற்கான காரணம் நேற்று இரவு எனது உறக்கத்தில் ஒரு சொப்பனம் வந்தது. அந்த கனவில் எனது இல்லாள் அதாவது என்னுடைய ஆன்மாவின் தரிசனம் எனக்குக் கிட்டியது.
இந்த ஜகத்தில் ஜனித்த அனைத்து ஜீவராசிகளும் பெண் தன்மை கொண்டதாகவும், இந்தப் பெண் தன்மை கொண்ட ஆன்மா இறைவனாகிய பரமாத்மாவாகிய ஒரு ஆணிடம் சரணடைய வேண்டும் என்று வேதங்களில் சில கூற்றுகள் உண்டு. அதை நான் நேற்று இரவு எனது சொப்பனத்தில் கண்டேன். சொப்பனத்தில் நிர்வாண நிலையில் எனது ஆன்மா தியானத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அவ்வழியாகச் சென்ற நான் அந்த நிலையை கண்டவுடன் ஏன் இப்படி உடை இல்லாமல் இருக்கிறீர்கள் தயவுசெய்து உடை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினேன்.
அதற்கு எனது நிலையே நிர்வாண நிலைதான் என்று அந்த பெண் உருவம் என்னிடம் பதில் கூறியது. பிறகு என்னை நீங்கள் இந்நிலையில் கண்டதால் என்னை நிச்சயம் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று இறைவனை பார்த்து அந்த ஆன்மா கேட்டுக்கொண்டது. அதற்கு நான் பதில் கூறலானேன். ஏய் பெண்ணே நானோ சன்யாச கோலம் பூண்டவன் ஆகையால் எனக்கு இல்லறத்தில் ஈடுபாடும் இல்லை, குடும்ப வாழ்க்கையில் எவ்வித பற்றும் இல்லை ஆதலால் உனது கூற்றுக்கு என்னால் செவி சாய்க்க முடியாத நிலை என்று கூறி அப்பெண்மணியிடம் விடைபெற்று விலகிச் செல்ல எத்தனிதேன்.
ஆனாலும் அந்த பெண்மணி என்னிடம் பேச ஆரம்பித்து சில விஷயங்களை கூற முயற்சி செய்தது. சுவாமி நீங்கள் ஏற்ற இந்த தவ வாழ்க்கையின் நோக்கமே என்னை இந்த நிலையில் காண்பதற்காகவே நான் உங்கள் உடல் எனும் உடையை உடுத்தியிருக்கும் நீங்கள் ஆவேன்.
இப்போது நீங்கள் என்று நினைக்கும் உடலை கடந்து உள்ளிருக்கும் என்னிடம் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்குள் உங்களுக்காக காத்திருக்கும் உங்களின் ஒருபகுதியாவேன் நான். இந்நிலையை தாங்கள் உணர வேண்டும் என்பதற்காக தவ வாழ்வில் தனித்திருகிறேன். இந்த சக்தி சிவமாகிய உம்முடைய பாதி இதை உணரவே உள்முகமாக உங்களின் பயணம் ஆரம்பம் ஆனது. உணர்ந்து முழுமை பெற முயற்சியுங்கள் என்று கூறி முடிக்க?
காலை விடியலில் கண்விழித்து எழுந்தேன். உண்மை புரிந்தது என்னுள் இருக்கும் பெண் தன்மையை நான் உணர வேண்டும். உணர உள்முகமாக பயணம் செய்தால் இந்த ஆன்மா இந்த உடலெனும் உடையை விடுத்து இறைவனை சேர்ந்து உள்ளொளி பெருகி அழ்கல் இன்றி ஓங்கும் அருட்பெருஞ் ஜோதியாக மாறும் என்ற உண்மை எனக்கு தெளிவாக புரிந்தது.
அதை நினைவில் வைத்து அந்தக் கனவில் என் மன கண்ணில் தோன்றிய அந்த பெண்மணியின் ஆன்ம அசரீரி உருவத்தை வரைய முயற்சி செய்தேன் அதன் விளைவுதான் இந்த ஓவியம். இது எனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு இது போன்று அடுத்தடுத்த நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவிட வேண்டும் என்று நீங்கள் விருப்பம் கொண்டால் உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரியப்படுத்தவும். நன்றி! வாழ்க வளமுடன் குருவே துணை

0 Comments