இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க
வேண்டும்.
மனிதனின் ஓய்வுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது உறக்கம். மனித வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி, தூக்கத்தில் தான் கழிகிறது.
உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை புதுப்பிக்கவும், சோர்வை நீங்கி புத்துணர்வு பெறவும் தூக்கம் முக்கியமானதாகும்.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கருத்தாகும். தூங்குவதைப் பற்றியும், அதில் உள்ள அறிவியல் உண்மைகள் பற்றியும், சித்தர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம், இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதி. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி, இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் உறங்காதவர்களுக்கு புத்தி மயக்கம், தெளிவின்மை, உடல் சோர்வு, பயம், படபடப்பு, மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் வரும் என கூறியுள்ளனர். எவ்வாறு உறங்க வேண்டும் என்பது குறித்தும் சித்தர்கள் கூறுகின்றனர்
இவற்றை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப்படுத்தும் தூங்கக் கூடாது.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால், இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால், பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்வதால், உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே, சுவாசம் வெளியே செல்வதால் ஆயுள் வளரும். இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து, பித்தநீரை அதிகரிக்கச்செய்து, உண்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
இடது பக்கம் சரிந்து படுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவியலின் விளக்கம்.
இரவு உணவு சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்து விட்டு இடது பக்கம் சரிந்து படுத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.சிறுகுடலில் உற்பத்தியாகும் மலப்பகுதிகள், இலியோசீக்கல் வால்வு வழியாக, வயிற்றின் இடது பக்கம் அமைந்துள்ள இறங்கும் பெருங்குடலில் நகரும். அதனால் மறுநாள் காலையில் மலக்கழிவுகள் எளிதில் வெளியேற உதவுகிறது.
இடப்பக்கம் சரிந்து படுப்பதன் மூலம் உடல் உறுப்புகள் இடது பக்கம் சரியும். இதன் விளைவாக ரத்தக் குழாயில் அழுத்தம் தவிர்க்கப்பட்டு, இதயத்தின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல், அதனுடைய வேளைப்பளு எளிதாக முடிகிறது.
நிணநீர் சுரப்பிகளில் உள்ள நீரில் புரதம், க்ளுகோஸ், இதர கழிவுகள், குழாய்களில் நடுவே அமைந்துள்ள முடிச்சு போன்ற க்ரந்திகளின் மூலம் சுத்தமாக்கப்பட்டு, இதயத்தின் இடது பக்கம் வந்து சேர்வதை இடது பக்கம் சரிந்து படுப்பதன் மூலம் எளிதாக்குவதால் இதயத்தின் வேலைப்பளு குறைகிறது.
இதயத்தின் இடது கீழ் பக்கம் அமைந்துள்ள வெண்டிரிக்கல் எனும் இடத்தில் இருந்து பெரும் தமனி வழியாக ரத்தத்தில் உள்ள பிராண வாயுவானது, இடதுபக்கம் படுக்கும் போது, புவி ஈர்ப்பு சக்தியினால் எளிதாக எடுத்து செல்லப்படுகிறது.
இதனால் இதயம் சுருங்கும் செயல்பாடு சுலபமாகிறது. நிணநீர் மற்றும் ரத்தம் மண்ணீரலில் எளிதாக நுழைவதால், மண்ணீரல் தனது செயலை சிறப்பாக செய்து முடிக்கிறது.
எனவே இடது பக்கம் படுப்பதன் மூலம் தசை சுருக்கத்தின் செயல்பாடுகளும் மேம்படுகிறது. இடது பக்கம் சரிந்து படுப்பதால், சாப்பிட்ட உணவானது வயிற்றின் இடது பக்கத்தில் தங்கும்.
இதனால் வயிறு மற்றும் பாங்கிரியாஸ் ஆகியவற்றில் சுரக்கும் அமிலங்கள் உணவினை சீராக செரிமானம் செய்வதற்கு உதவுகிறது. உணவுப்பகுதியின் நடுவில் சேரும் பித்தநீர் செரிமானத்திற்கும், அமிலங்களை சமன்செய்வதற்கும் பெரிதும் உதவுகிறது.
எனவே உணவின் இந்த சீரான செரிமானத்தால், சோர்வு நிலை நீங்கி, உடலின் இயக்கம் சுறுசுறுப்பாகிறது.
இடது பக்கம் சரிந்து படுத்து விட்டு வலது கையால் அழுத்தி படுக்கையை விட்டு எழுந்துக் கொள்ளும் போது, இடுப்பு எலும்பு மற்றும் கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கும்
0 Comments